நகைக்காக தாயை கொன்று கொள்ளை நாடகமாடிய மகள் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் வி.ஐ.பி. சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 54). இவர் ஒரு தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இதனால் கீதா தனது மூத்த மகள் சரண்யா (தனியார் பள்ளி ஆசிரியர்) மற்றும் பேரனுடன் வசித்து வந்தார்.
கடந்த 19-ம் தேதி அன்று சொந்த வேலை காரணமாக கீதா பணிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது பேரன், வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கீதா அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும்
பீரோவில் இருந்த ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து மகள் சரண்யா அளித்த புகாரின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சிபின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது மகள் சரண்யா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நகைக்காக தாயுடன் ஏற்பட்ட தகராறில் தானே தாயைக் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும், பின்னர் மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து சென்றது போல் நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து சரண்யாவைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகைகளை மீட்கும் பணியிலும், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.







