• November 10, 2026

கலெக்டருக்கே பாதுகாப்பில்லாத அவலம்; பிரேமலதா கண்டனம்

 கலெக்டருக்கே பாதுகாப்பில்லாத அவலம்;  பிரேமலதா கண்டனம்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி  மாவட்ட கலெக்டருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததோடு, மதுபோதையில் அவரது இல்லத்திற்கு சென்று அச்சுறுத்தியதாகவும் வெளியாகி வரும் குற்றச்சாட்டுகள் கடும் கண்டனத்திற்குரியவை.

ஒரு மாவட்டத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் மாவட்ட கலெக்டருக்கே  இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன என்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த அளவுக்கு துணிச்சல் இருந்திருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது. பெண்களை பாதுகாக்கும் அரசு என்று பெருமை பேசும் முதல்-அமைச்சர் ஆட்சியில், ஒரு பெண் மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது தமிழக அரசின் நிர்வாக அவலத்தையே வெளிப்படுத்துகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கே தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் மிகுந்த கவலையளிக்கிறது. எனவே, தமிழக முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை கண்டறிய வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்வித அரசியல் தலையீடுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக அரசும் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகார பதவியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஒரு பெண் மாவட்ட கலெக்டருக்கே உரிய பாதுகாப்பை வழங்க முடியாத அரசு, தமிழகத்தில் உள்ள மற்ற பெண்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யும் என்ற கேள்வி எழுகிறது. பெண்களின் பாதுகாப்பிலும் கண்ணியத்திலும் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்க கூடாது!.

இவ்வாறு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *