• November 10, 2026

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

 முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகத்தில் முந்தைய திமுக  ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் குற்றம்சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அன்பில் மகேஷ் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அக்டோபர் . 26-ந் தேதி முன்ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அன்பில் மகேஷை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள அன்பில் மகேஷ், ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி விசாரித்தார். அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், இந்த வழக்கில் தனது கட்சிக்காரருக்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் இல்லை என்று வாதிட்டார். முதலில் ரூ.100 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகார், பின்னர் ரூ.400 கோடி, ரூ.600 கோடி, ரூ.800 கோடி என்று மாறிக்கொண்டே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பணம் கொடுத்ததாகக் கூறப்படும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், அன்பில் மகேஷின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதால் அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பில்லை என்றும் வாதிட்டார். மேலும், அன்பில் மகேஷ் தலைமறைவாக மாட்டார் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமார், அரசகுமார் ஆகியோருடன் அன்பில் மகேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

முத்துக்குமார் வசூலித்த பணத்தை சரவணன் என்பவர் அன்பில் மகேஷின் வீட்டுக்குக் கொண்டு சென்றதாகவும், இதற்கான வீடியோ ஆதாரம் போலீசாரிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும், முத்துக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அன்பில் மகேஷிடம் ஏற்கெனவே 3 நாட்கள் நடத்திய போலீஸ் காவல் விசாரணையில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

அன்பில் மகேஷ் தரப்பு மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள் கடந்த . 5-ந் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று . 10-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்ற காவல்துறை வாதத்தை ஏற்று ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 16 நாட்களாக புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஷை மூன்று நாட்கள் காவலில் எடுத்தும் போலீசார் விசாரித்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *