புதுக்கோட்டையில் ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள்; முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்
Oplus_16908288
தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து
விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார்.
அவர் சென்ற விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதை தொடர்ந்து, அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக புதுக்கோட்டை புறப்பட்டார்.
திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு சுமார் 49 கி.மீ. தூரம் தனது வாகனத்தில் சாலை மார்க்கமாக முதல்-அமைச்சர் விஜய் பயணம் செய்தார்.அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் பர்வேஸ் முதல்-அமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் முதல்-அமைச்சர் விஜய்க்கு புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்
கலெக்டர் அலுவலகத்தில் பாரம்பரிய பயிர் வகைகளின் கண்காட்சி, மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் சுயதொழில்கள் தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார். அங்கிருந்த விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டையில் ரூ.100 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து 104 பயனாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச தையல் மெஷின், வங்கிக் கடன் உதவிகள், டிராக்டர்கள், வேளாண் கருவிகள் கல்விக்கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.







