வீடு புகுந்து 14 பவுன் நகைகள் திருட்டு: பெண் உள்பட 3 பேர் கைது
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரப்பேரி, ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வீரமூர்த்தி (வயது 71). இவர் கடந்த 27.9.2026 அன்று தனது வீட்டின் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் திருட்டு போனதாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வீரமூர்த்தி வீட்டில் தங்க நகைகள் திருடியது சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் மகன் மணிகண்டன் (30), திருச்சி, மணப்பாறை பகுதியை சேர்ந்த பொன்னன் மகன் பாலமுருகன் (29) மற்றும் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த நல்லமுத்து மகள் சரண்யா (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிப்காட் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி மணிகண்டன், பாலமுருகன் மற்றும் சரண்யா ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 14 பவுன் தங்க நகைகளை மீட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







