செயற்கை மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல்; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சேலம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
இடைத்தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெறவில்லை. ஜனநாயக முறைப்படி தவெக தேர்தலை சந்திக்கவில்லை. பணபலம், அதிகார பலத்தால்தான் தவெக வெற்றி பெற்றுள்ளது.
இடைத்தேர்தலில் தவெகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களே கூறினர். தவெக கூட்டணிக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளே தவெகவை எதிர்த்து இடைத்தேர்தலில் போட்டியிட்டன.
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் வாங்காத ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் தவெக அரசு மின்சாரம் வாங்குகிறது. திமுக ஆட்சியில் ரூ.20-க்கு மின்சாரத்தை வாங்கியதை ஊழல் என்று விமர்சித்த விஜய், தற்போது ஒரு யூனிட் ரூ.35-க்கு வாங்குகிறார். ஏற்கெனவே மின்சாரத் துறை கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது தேவையா?

செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்கின்றனர். ஆந்திர மாநில அரசு அக்டோபரில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்தது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்வதை ‘வெற்றி மெகா ஊழல் திட்டம்’ எனக் கூறலாம்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி, காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி உயர்வே இல்லை என உணவுத் துறை அமைச்சர் கூறிவிட்டுச் செல்கிறார். தவெக அரசிடம் திட்டமிடல் இல்லை, எதையும் திட்டமிட்டு செய்வது இல்லை.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டும் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், கடைமடை வரை சென்றடையவில்லை. அடுத்த கட்சியைச் சேர்ந்தவர்களை கூவிக் கூவி அழைக்கிறது தவெக. பிற கட்சியினரை தவெக இணைப்பது என்பது தங்கள் கட்சியில் எதுவும் இல்லை என்பதுதானே பொருள்.
முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விமர்சித்தார். தற்போது அந்த கல்லாப்பெட்டி கூட்டணி தயவால்தான் தவெக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி, அதிகாரத்துக்காக தவெக அந்தர் பல்டி அடித்துள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.







