அமைச்சர் ஆனந்த்துடன் துரை வைகோ எம்.பி.சந்திப்பு; 3 கோரிக்கை கடிதம் வழங்கினார்
மதிமுக திருச்சி தொகுதி எம்.பி,.துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர். என். ஆனந்த்தை அவரது இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணிக்கு நேரில் சந்தித்து 3 முக்கிய கோரிக்கை கடிதங்களை வழங்கினேன்.
முதலாவதாக, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் / வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பணியாளர்களின் சார்பில் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை கடிதம் கொடுத்தேன்,

குறிப்பாக, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிடவும், திட்டப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் 2.0 / வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0 மூலம் எவ்விதப் பணியிடைவெளியும் இன்றித் தொடர்ந்து பணி வழங்கி, அவர்களின் பணித் தொடர்ச்சியையும் பணிப் பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
இரண்டாவது கோரிக்கையாக, கோவில்பட்டி நகராட்சி வார்டு எண்.21-இல் உள்ள அரசு அலுவலக வளாக சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அளித்தேன்.
மூன்றாவதாக, சென்னையை அடுத்த எகாட்டூர் கிராமம் மற்றும் பல்வேறு குடியிருப்புப் பகுதியை பேரூர் 400 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்கத் திட்டத்தின் விநியோக வலையமைப்பில் இணைத்திட வேண்டி விரிவான கோரிக்கை மனு அளித்தேன்.

அதில், பேரூர் 400 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்கத் திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே, எகாட்டூர் கிராமம் மற்றும் பல்வேறு குடியிருப்புப் பகுதியை அதன் விநியோக வலையமைப்பில் இணைத்து, அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான குடிநீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது,
இந்த சந்திப்பின் போது மதிமுக மாவட்ட செயலாளர் பூந்தமல்லி பாபு, மற்றும் மாங்காடு முருகன் நொச்சிக்குப்பம் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.







