கோவில்பட்டி கண்காட்சியில் 155 நாடுகளின் தபால் தலைகள்
தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம் அனைத்து அஞ்சலங்களிலும் கடந்த 9.10.2026 முதல் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்கள் , பழைமை வாய்ந்த அஞ்சல் தலைகள் பற்றி தெரிந்து கொள்ளவும், அஞ்சல் தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வண்ணம், கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 155 நாடுகளின் தபால் தலைகள், பழங்காலத்து அரிய வகை புகைப்படங்கள், சுதந்திரத்திற்கு முந்தைய தமிழ் நாளேடுகள், காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பள்ளிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதனை பார்வையிட்டு சென்றனர்.
இந்த அஞ்சல் தலை கண்காட்சியை கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சார்ந்த, மாணவி ஒருவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
கண்காட்சியின் போது அஞ்சல் தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவ மாணவியர்களுக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் விரிவாக எடுத்து கூறினார்.







