16 வயதுக்கு உட்பட்டசிறுவர், சிறுமிகளின் சமூக வலைத்தள பயன்பாட்டினை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை; கோவில்பட்டி எழுத்தாளர் கடிதத்துக்கு பதில்
கோவில்பட்டியை சேர்ந்த சிறார் கதை எழுத்தாளர் கோ.சுரேஷ்குமார், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார், அதில் அவர் கூறி இருந்ததாவது:-
தமிழகத்தின் எதிர்கால தூண்களான 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் அதீத பயன்பாடு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட எனது ஆழமான அனுபவ ஆய்வின் புள்ளி விபர அடிப்படையில், சமூக வலைத்தளப் பயன்பாட்டின் உளவியல் காரணங்கள், அதன் விளைவுகள் மற்றும் அதற்கான சீர்திருத்தப்பரிந்துரைகளை தங்கள் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஆய்வின் முக்கிய விபரங்கள் ஆராய்ந்து அறிந்ததில் உளவியல் அடிமையாதல்: சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் உடனடி அங்கீகாரம் (லைக்ஸ், கமெண்ட்ஸ்) குழந்தைகளின் மூளையில் டோபமைன் தூண்டுதலை ஏற்படுத்தி, ஒருவித போதைக்கு அடிமையாவது போன்ற உணர்வை உருவாக்குகிறது.
‘தவறிவிடுவோமோ’ என்ற பயம் (FOMO) மற்றும் சமூக ஒப்பீடு ஆகியவை மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தாழ்வுமனப்பான்மைக்கு வழிவகுக்கின்றன.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூளை முழுமையாக வளர்ச்சி அடையாததால், சுய கட்டுப்பாடுகுறைந்து, சமூக வலைத்தளங்களின் கவர்ச்சிக்கு எளிதில் அடிமையாகின்றனர்.
அதீத சமூக வலைத்தளப் பயன்பாடு மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, உடல் உழைப்புகுறைதல் மற்றும் கல்வி செயல்திறன் குறைதல் போன்ற பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் 14-16 வயதுடைய குழந்தைகளில் 90% பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்.மேலும், 26% க்கும் அதிகமான இளம் வயதினர் சமூக வலைத்தளங்களை அதிகப்படியாகப் பயன்படுத்துகின்றனர். நகர்ப்புற மற்றும் கிராமப்புற குழந்தைகளிடையே பயன்பாட்டு முறைகள் வேறுபட்டாலும், அடிமையாதல் அபாயம் இரு தரப்பிலும் உள்ளது.
குழந்தைகளின் நலன் கருதி, கீழ்க்கண்ட பரிந்துரைகளை தங்கள் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பணிவன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் பின்பற்றி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.
சமூக வலைத்தள நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு தொடங்குவதைத் தடுக்க கடுமையான வயது சரிபார்ப்பு முறைகளை அமல்படுத்த அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் வரைவு தகவல் தொழில்நுட்ப (டிஜிட்டல் குறியீடு) விதிகள் 2026 ஐ தமிழக அரசு ஆதரிக்க வேண்டும்.

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் குடியுரிமை மற்றும் சமூகவலைத்தளங்களின் பொறுப்பான பயன்பாடு குறித்த கட்டாயப் பாடங்களைச் சேர்க்க வேண்டும்.
சமூக வலைத்தள அடிமையாதலின் அறிகுறிகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநிலம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும். பெற்றோர் கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் திறந்த உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.
டிஜிட்டல் அடிமையாதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எளிதில் அணுகக்கூடிய மனநலஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகளை அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மூலம் வழங்க வேண்டும்.
இவ்வ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது
இந்த பரிந்துரை ஏற்கபட்டு இது தொடர்பாக எழுத்தாளர் சுரேஷ்குமாருக்கு தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் ரா.சங்கீதா சின்னராணி,அனுப்பி இருக்கும் பதில் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாட்டினால் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் மற்றும் சீர்திருத்தத்திற்கான மனுவின் பரிந்துரை ஏற்கப்பட்டது.
தங்கள் கோரிக்கையான 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாட்டினால் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் மற்றும் சீர்திருத்தத்திற்கான அறிவுரைகள் அனைத்து பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற விபரம் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.







