• October 31, 2026

மதுரை -தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம்; ஆலோசனை குழு டெண்டர் வெளியீடு

 மதுரை -தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம்; ஆலோசனை குழு டெண்டர் வெளியீடு

தென் தமிழகத்தின் மிக முக்கிய ரெயில்வே திட்டங்களில் ஒன்றான மதுரை – தூத்துக்குடி இடையேயான புதிய அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், ரூ.2.51 கோடி மதிப்பில் ஆலோசனை டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 143.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்புதிய அகல ரயில் பாதையில், மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரையிலான 18 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதமே நிறைவடைந்தன. இந்த புதிய ரெயில் பாதை மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, அருப்புக்கோட்டை, மேல்மருதூர் மற்றும் மீளவிட்டான் வழியாகத் தூத்துக்குடியை சென்றடையும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஆலோசனைக் குழு டெண்டரின் கீழ், சுமார் 120 கிலோமீட்டர் தூரத்திற்கான இறுதி இருப்பிடம் ஆய்வு, DGPS தொழில்நுட்பம் மூலமாக நிலங்களை அளவீடு செய்தல், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் (ROB / RUB) வடிவமைப்பு, புதிய ரெயில் நிலையங்களுக்கான வரைபட வடிவமைப்பு, நீர்வழி மற்றும் வடிகால் ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் முழுமையான பொறியியல் ஆவணங்களைத் தயாரித்தல் ஆகிய முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

இவற்றுக்கான அறிக்கையை தொடர்புடைய ஆலோசனை குழுவினர் நான்கு மாதங்களுக்குள் முடித்து சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில் மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே மிக வேகமான நேரடி ரெயில் இணைப்பு வசதி சாத்தியமாகும். இது பயணிகளுக்கு மட்டுமன்றிச் சரக்குப் போக்குவரத்து சேவைக்கும் பெரும் உதவியாக இருக்கும். 

மேலும், தூத்துக்குடி துறைமுகத்தின் வணிக வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதுடன், தென் தமிழகத்தின் தொழில் துறை, வணிகம் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். 

அதேவேளை, இத்திட்டம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ரெயில்வே ஆர்வலர்கள், “டெண்டர் வெளியீடு என்பது முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே; இத்திட்டம் விரைவாக நனவாக வேண்டுமானால் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, காலதாமதமின்றி பணிகளைச் செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *