வேளாண் பட்ஜெட்டில் எந்த புது திட்டமும் இல்லை; உதயநிதி ஸ்டாலின் பேட்டி
திமுக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சட்டசபை முடிந்ததும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
இன்றைக்கு த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இதை பட்ஜெட் என்று சொல்வதை விட, முதலமைச்சருக்கு முழுக்க முழுக்க ஜால்ரா அடித்து, ஒரு மிகப்பெரிய புகழுரையை அமைச்சர் சபை மரபுகளை மீறி, இந்தச் செயலைச் செய்துள்ளார்.
வேளாண் பட்ஜெட்டில் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்றால், அதில் எதுவும் கிடையாது. இந்த ஆட்சியில் காவிரியில்தான் தண்ணீர் வரவில்லை என்று பார்த்தால், வேளாண் பட்ஜெட்டில் எந்தப் புது திட்டத்தையும் இந்த ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை.

இந்த பட்ஜெட்டைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், நேற்றைய தினம் போலத்தான் இன்றைக்கும், திராவிட முன்னேற்றக் கழக அரசின், திட்டங்களையெல்லாம் பெயரை மாற்றி, அதற்கு முன்பு ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து, அவர்கள் கட்சியின் பெயருடைய வார்த்தையை மட்டும் சேர்த்து, புதுத் திட்டம் போல சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். எனவே, இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது.
குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியின் போது முதலமைச்சர் சொன்ன முக்கியமான ஒரு வாக்குறுதி, 5 ஏக்கர் வரைக்கும் நிலம் வைத்திருக்கக்கூடிய எல்லோருக்கும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று எல்லா இடத்திலும், இந்த வாக்குறுதியைச் சொல்லித்தான் மக்களை ஏமாற்றினார்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதற்கு எதுவுமே செய்யவில்லை. முதலில் என்ன சொன்னார்? 50,000 ரூபாய் வரைக்கும் கடன் தள்ளுபடி என்றார். பிறகு எங்களுடைய கோரிக்கை, விவசாயிகளுடைய கோரிக்கைகளையெல்லாம் ஏற்று, அதை 75,000-ஆக மாற்றினார். ஆனால், இன்றைக்கு விவசாயிகள் நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி முழுக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எந்தவிதமான பதிலையும் வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாயைத் திறந்து சொல்லவில்லை.
விவசாயிகளுக்கான பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று நாளைக்கு, கேள்வி நேரம் முடிந்தவுடனே ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும், காவிரிப் பிரச்சினை பற்றிப் பேச வேண்டும், விவசாயிகளின் பாதிப்பு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் எங்களுடைய கடிதத்தைக் கொடுத்திருக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.
அப்போது, இது தொடர்பாக இன்னும் விரிவாகப் பல்வேறு கேள்விகளை நிச்சயமாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொல்வார் என்று தமிழ்நாட்டு மக்கள் போல, விவசாயப் பெருங்குடி மக்கள் போல நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே விவசாயிகளுக்குத் துணையாக நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

கேள்வி:-நீங்கள் என்ன நாடகம் நடத்தினீர்களோ, அதே நாடகத்தைத்தான் த.வெ.க-வும் போடுகிறது என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
பதில்:-நாடகமா? என்ன நாடகம்?
கேள்வி:-நீங்களும் வேளாண் பட்ஜெட் என்று ஒரு நாடகத்தைப் போட்டீர்கள், அவர்களும் அதே நாடகத்தைப் போடுகிறார்கள் என்பது அவருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.
பதில்:-நாங்களா தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம்? பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று நாங்கள் வாக்குறுதி கொடுத்தோமா? சொல்லுங்கள்.
நாளைக்கு, இவை அனைத்தையும் சட்டமன்றத்தில் பேச இருக்கிறோம். தைரியம் இருந்தால், முதலமைச்சர் எழுந்து இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். நாங்கள் அவையில் பதில் சொல்கிறோம்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.







