மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய அளவில் 3-வது அணி: திமுக முயற்சி
நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி, மும்பை பந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்திற்கு நேற்று முன்தினம் சென்றார்.
கனிமொழி எம்.பி.யை உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த சந்திப்பின் போது உத்தவ் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய் மற்றும் மிலிந்த் நர்வேக்கர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா குறித்தும், அது தொடர்பாக இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

மேலும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பிராந்திய மற்றும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் மற்றும் வர விருக்கும் அரசியல் சவால்களில் அவர்களின் பங்கு உள்பட பல்வேறு இதர முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் ஒரு மணிநேரம் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சரத்பவார் மற்றும் அவரது மகளும் லோக்சபா எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரை டெல்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.
‘இந்தியா’ கூட்டணியில், காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள மாநில கட்சிகளை ஒன்றிணைத்து, தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க திமுக திட்டமிட்டிருப்பதற்கு இந்த சந்திப்புகள், அச்சாரம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:-
உத்தவ் தாக்கரேவை, கனிமொழி சந்தித்தபோது, தென் மாநிலங்களை பாதிக்கும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை குறித்தும் அதற்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் கனிமொழி விவாதித்து உள்ளார். மேலும், தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்தும் பேசியுள்ளார்.
சென்னையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றது; திமுக, புறக்கணித்தது.
இதேபோல, மராட்டியத்தில், காங்கிரசுடன் உத்தவ் தாக்கரேக்கு கருத்து வேறுபாடு உருவாகி உள்ளது. இந்த சூழலில், மூன்றாவது அணியை உருவாக்க, மாநில கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க கனிமொழி திட்டமிட்டுள்ளார்.

அடுத்தகட்டமாக, ஆம்-ஆத்மி கட்சியை சேர்ந்தவரான பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிந்ததும் மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் கனிமொழி சந்தித்து, தேசிய அளவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.







