செந்தில் பாலாஜிக்கு, சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது ;கைது செய்யவும் தடை
தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இதையொட்டி செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார்கள். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவரை கைதுசெய்யக் கூடாது.’ என வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாஸ்மாக் வழக்கில் 100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் வழக்கின் விசாரணைக்கு பல்வேறு வழிகளில் தடையை ஏற்படுத்தினார். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளது.’ என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்.? என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவரை கைது செய்யவும் தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நீதிபதிகள், நிபந்தனைகளை மீறினால் முன் ஜாமீனை ரத்துசெய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.







