தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் பவள விழா நினைவு சிறப்பு மலரை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தூத்துக்குடியில் 75 ஆண்டு காலமாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் புகழ்பெற்ற வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்தத் தனித்துவமான “Memorabilia & VOCC Diary” என்னும் நினைவுப் புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல தலைமுறை மாணவ, மாணவியர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இக்கல்லூரி பெரும் ஊன்றுகோலாக இருந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பவள விழா நினைவுகளைத் தொகுத்து இந்தச் சிறப்பு டைரி மற்றும் நினைவுப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன், மற்றும் வ.உ.சிதம்பரம் கல்லூரி செயலர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், வ.உ.சிதம்பரம் கல்வியியல் கல்லூரி செயலர் ஏ.பி.சி.வி. சண்முகம், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி செயலர் சுப்புலட்சுமி, வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் வீரபாகு, கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ரோஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பேராசிரியர்கள் ராதிகா, மீனாட்சி சுந்தரம், பட்சிராஜன் மற்றும் ஜாக்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







