தூத்துக்குடியில் ஜூன் 1 முதல் சிறப்புத் தொழில் கடன் முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
தூத்துக்குடி மாவட்ட தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் வசதிக்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) சார்பில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஒரு மாத சிறப்புத் தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது.
மாநில அளவில் மிக முக்கிய நிதி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் தொடர்ச்சியாகக் கடனுதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் வசதிக்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) சார்பில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஒரு மாத சிறப்புத் தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி போலப்பேட்டை, என்.பி.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கிளை அலுவலகத்தில், இந்த முகாம் நடைபெற உள்ளது. இ
ம்முகாமில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு தொழில் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் குறித்தும், கடனுதவி பெறும் வழிமுறைகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளும் விளக்கங்களும் வழங்கப்பட உள்ளன.
தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படி, இம்முகாமில் சமர்ப்பிக்கப்படும் நீண்டகாலக் கடன் விண்ணப்பங்களுக்கான ஆய்வுக்கட்டணம் (Investigation Fees) முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தகுதி பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) தமிழக அரசின் சார்பில் 25 விழுக்காடு மூலதன மானியமாக அதிகபட்சமாக ரூ.150 லட்சங்கள் (1.5 கோடி ரூபாய்) வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் புதிய முனைவோருக்கு முன்னுரிமை: உற்பத்தி சார்ந்த குறுந்தொழில்களுக்குத் தமிழக அரசின் மூலதன மானியமாக 25 விழுக்காடும், கூடுதல் மூலதன மானியமாக 10 விழுக்காடும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, புதிய தலைமுறை மகளிர் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்குக் கூடுதல் சலுகையாக 5 விழுக்காடு சிறப்பு மூலதன மானியமும் வழங்கப்பட உள்ளது.
முதல் தலைமுறைத் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது முறையான தொழில் திட்ட அறிக்கைகளுடன் முகாமில் பங்கேற்றுக் கடன் மற்றும் மானியச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இம்முகாம் குறித்த கூடுதல் விபரங்களைப் பெற விரும்பும் பொதுமக்கள் 0461-3500032 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது







