பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு; தமிழக திட்டங்களுக்கு நிதியளிக்க கோரிக்கை
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றார்,
முதலமைச்சர் விஜய்க்கு, டெல்லி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் கௌரவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் பின்னர், டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘சேவா தீர்த்’ அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்குப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் முக்கியத் திட்டங்களுக்கான கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
இந்தச் சந்திப்பில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மத்திய அரசின் விசேஷ நிதி ஒதுக்கீடு குறித்துப் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிக்கிம் சென்றுள்ளதால், அவர் நாளை (மே 28) டெல்லி திரும்பியவுடன் முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறக் கூடும் என்று தெரிகிறது.

இந்த டெல்லிப் பயணத்தின் போது, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் தனித்தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
மத்திய ஆளுங்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.







