சைபர் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டை சேர்ந்தவருக்கு 3 ஆண்டு சிறை; தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,..
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு போலியான வாட்சப் எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் போலி விளம்பரத்தை அனுப்பி அதன் மூலம் ரூபாய் 36,98,000/- மோசடி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இஷி பெடிலிஸ் நுடுபியூஸி என்பவரை கைது செய்தனர்.
மேற்படி வழக்கை சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -IV ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் 20.5.2026 அன்று நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இஷி பெடிலிஸ் நுடுபியூஸி () என்பவரை குற்றவாளி என உறுதி செய்து மோசடி குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 37,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி சகாய ஜோஸ், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர். சாந்தி, அப்போதைய ஆய்வாளர் சிவசங்கரன், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் கண்ணன், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் ஜெயமுருகன் , திருநெல்வேலி மேற்கு காவல் துணை ஆணையர் விஜயகுமார் (பொறுப்பு) ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.







