ஓடும் ரெயிலில் பயணியிடம் நகைபறித்த 4 கொள்ளையர்கள் கைது
ஓடும் ரெயிலில் பயணிகளை அச்சுறுத்தித் நகை பணம் செல்போன் பறித்துச் சென்ற வழக்கில், 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி ரெயில் நிலையத்தில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புன்னைவனம் பகுதியைச் சேர்ந்த ராமைய்யா மகன் பிச்சையா (55) என்பவரிடம் 4 பேர் கும்பல், கைப்பேசி மற்றும் சட்டைப் பையிலிருந்த ரூ.100 ரொக்கப் பணத்தை கத்திமுனையில் பறித்துக் கொண்டு தப்பியோடியது..

இது போல் தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த மரிய அமல்தாஸ் (55). என்பவர் கோவையிலிருந்து புறப்பட்ட ‘கோவை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் பயணம் செய்துள்ளார். மறுநாள் அதிகாலை 3:30 மணியளவில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் இறங்கிய மரிய அமல்தாஸ், அங்கிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் பயணிகள் ரெயிலில் ஏறிப் புறப்பட்டுள்ளார்.
அப்போது அதே கொள்ளை கும்பல் ரெயிலில் ஏறி அவரைமிரட்டி அவர் கையில் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.300 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு, ரெயிலில் இருந்து குதித்துத் தப்பியோடிவிட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்,

.இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடி தாளமுத்து நகர் புதிய முனியசாமி புரம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் கணேசன் (22), தாளமுத்து நகர் சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் வசந்தகுமார் (24), ராமலிங்கம் மகன் ராஜலிங்கம் (23) மற்றும் தாளமுத்து நகர் சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துக்குமார் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்







