டாக்டர் சுப்பையா கொலை வழக்கு:9 பேரை விடுவித்த ஐகோர்ட்டு உத்தரவு ரத்து
சென்னையில் கடந்த 2013 இல் சொத்து தகராறில், நரம்பியல் டாக்டர் சுப்பையா, கூலிப்படையினரால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்கள் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், டாக்டர் சுப்பையா கொலை குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கொலை வழக்கில் தொடர்புடைய பொன்னுசாமி, மேரி புஷ்பம் ஆகியோரை தவிர்த்து அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரணடையவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொன்னுசாமி, மேரி புஷ்பம் ஆகியோர் அவர்களின் மகன்களின் தூண்டுதலின் பேரிலேயே இந்த விவகாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதேவேளையில் அவர்களின் வயதை கருத்தில் கொண்டு தண்டனையை குறைப்பது தொடர்பாக ஆளுநருக்கு மனு அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பொன்னுசாமி, மேரி புஷ்பம் ஆகியோர் ஆளுநருக்கு தண்டனை குறைப்பு தொடர்பாக மனு அளித்து அதில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை இருவருக்கும் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







