அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது; -நடிகர் விஷால் கருத்து
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதன் பின்பு தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது குறித்து தென்னிந்திய நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியதாவது:-
அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை எந்த அனுபவமும் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா?

30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த முதல்-அமைச்சர் விஜயிடம் வைப்பது சரியாக இருக்குமா?
அமைச்சர் ராஜ்மோகனை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை. இது என்னுடைய கருத்து மட்டுமே”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
…







