5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). இவர் 9 முதல் 10 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.

இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் சந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சந்திரனுக்கு ஒவ்வொரு பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் தலா ஒரு மரண தண்டனை வீதம் மொத்தம் 5 மரண தண்டனைகளை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றவாளிக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம், மொத்தம் ரூ.35 லட்சம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கொடிய குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.







