கோவில்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு ஆக்கி போட்டி; ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கோவில்பட்டி யில் இன்று விழிப்புணர்வு ஆக்கி போட்டி நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இப்போட்டியை தொடக்கி வைத்து, விழிப்புணர்வு உரையாற்றினார். ஆட்சியர் விஷு மகாஜன் பேசியதாவது:-

“நான் எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் நாள்தோறும் ஆக்கி விளையாடுவேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஹாக்கி மைதானத்தைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கோவில்பட்டியில் இவ்வளவு நவீன வசதிகளுடன் கூடிய ஹாக்கி மைதானம் இருப்பதும், இங்குள்ள வீரர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து வருவதும் பாராட்டுக்குரியது. எனக்கும் நேரம் கிடைக்கும்போது மீண்டும் இங்கு வந்து உங்களுடன் விளையாடுவேன்.
விளையாட்டில் ஒவ்வொரு வீரரும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் முக்கியமானவர். ஆக்கியில் ஒவ்வொரு இலக்கும் (Goal) முக்கியமானது; தேர்தலில் நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய இலக்காகும்.
குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் தங்களது முதல் போட்டியை எவ்வளவு ஆர்வத்துடன் அணுகுவார்களோ, அதே பொறுப்புடன் முதல் வாக்கையும் பதிவு செய்ய வேண்டும்.”
தூத்துக்குடி மாவட்டம் வாக்குப்பதிவு விகிதத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பிடிக்க வேண்டும் .மாணவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் வாக்களிக்கத் தூண்ட வேண்டும்
இவ்வாறு ஆட்சியர் விஷு மகாஜன் கூறினார்.

தொடர்ந்து, ஆட்சியர் விஷு மகாஜன் நேரடியாகக் களமிறங்கி ஆக்கி விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
முன்னதாக, 390 கல்லூரி மாணவ-மாணவியரகள் மைதானத்தில் ‘Vote 100%’ என்ற வடிவில் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹிமான்ஷு மங்கள், வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலர்/உதவி ஆட்சியர் (பயிற்சி) தி. புவனேஷ் ராம், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தினராஜ், கோவில்பட்டி வட்டாட்சியர் அப்பனராஜ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.







