திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் ; கனிமொழி எம்.பி.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று (4/2/2026) நடைபெற்றது.
இக்குழுவின் தலைவரான திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எம். அப்துல்லா, பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ்., சுரேஷ் சம்பந்தம் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்டு ஆலோசனை நடைபெற்றது. சமுதாய பிரதிநிதிகள், வணிகர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி: கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட உள்ளது.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்புகள் இன்று எங்களைச் சந்தித்து, தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஒரு அமைப்பு மட்டுமல்லாமல், கல்வியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், பெண்கள் அமைப்புகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் தங்களுடைய கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

அவர்களுடைய கருத்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து, அதில் எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்பதைப் பரிசீலனை செய்து, அதை முதலமைச்சர்களிடம் அனுமதி பெற்று பின்னர், எந்தெந்த கருத்துக்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கருதுகிறார்களோ, அது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று விரைவில் வெளியிடப்படும்.
மக்கள் தங்களுடைய கருத்துகளை ‘TN Manifesto’ என்ற போர்டல் மூலம் தெரிவிக்கலாம். எழுத்து பூர்வமாகவோ அல்லது குரல் பதிவாகவோ உங்கள் கருத்துகளைப் தெரிவித்தால் அதுவும் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும்.
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேசமயம், குழுவில் இருக்கக்கூடியவர்கள்தான் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பிற விஷயங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதுகுறித்து நான் கருத்து சொல்ல முடியாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சு. வெங்கடேசன், மாணிக் தாக்கூர் உள்ளிட்ட 8 எம்.பிக்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் (LOP) பேச எழுந்த ஒவ்வொரு முறையும் அது தடுக்கப்பட்டு, அவருடைய உரை அவையில் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவியது. அதனால்தான் அனைவரும் ஒன்றாக அமர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவானது.
இவ்வாறு கனிமொழி கூறினார்.







