கோவில்பட்டி அருகே விமான பயிற்சி நிலையம் அமைக்க கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணி; ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க ஆட்சியர் இளம்பகவத் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
1997-ம் வருடத்திய தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம் பிரிவு 3 துணைப்பிரிவு 2-ன் கீழான பொது அறிவிக்கை
கீழ்க்காணும் விபர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் தோணுகால் மற்றும் நாலாட்டின்புத்தூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள நிலங்கள் தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம் 1997ன் பிரிவு 3(2)ன் கீழான அறிவிப்பிற்கு இணங்க தொழிலியல் நோக்கத்திற்காக, அதாவது விமான பயிற்சி நிலையம் அமைக்க கூடுதலாக நிலங்கள் தேவைப்படுகின்றன என்று அறிவிக்கப்படுகிறது.

நில எடுப்பு நிலங்களுக்கு பாத்தியதை உள்ள அனைவரும் இந்நில எடுப்பு தொடர்பான தங்களின் கோரிக்கைகளையோ அல்லது ஆட்சேபனைகளையோ, இவ்விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30(முப்பது) நாட்களுக்குள் நில எடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தூத்துக்குடி அவர்களுக்கு எழுத்து மூலமாக அளிக்க வேண்டியது.
எந்த ஒரு ஆட்சேபனையோ அல்லது கோரிக்கையோ, குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குப்பின்னர் வரப்பெற்றாலோ அல்லது நில பாத்தியதாரர் அந்நிலத்தின் மீதான உரிமை தொடர்பான ஆதாரங்கள் அத்தனையும் தெரிவிக்க தவறிவிட்டாலோ, அந்த ஆட்சேபனை கோரிக்கை நிராகரிக்கப்படும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் வரப்பெற்ற ஆட்சேபனைகள் அனைத்தும் 13.2.2026 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படும். ஆட்சேபனைகள் நேரிலோ அல்லது ஏஜெண்ட் மூலமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது ஆவண சான்றுகளையோ அவர்களிடம் ஆட்சேபனைக்கு அடையாளமாக தாக்கல் செய்யத் தெரிவிக்கப்படுகிறது.








