கோவில்பட்டியில் மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
கோவில்பட்டியில் மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது,
கடந்த 2024ம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பிரியாத்தி (வயது 83) என்பவர் தனது மகன் பாலமுருகன் (38) என்பவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தார்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் – 11 ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று (28.1.2026) தீர்ப்பு அளித்தார்.
மகனை கொன்ற பிரியாத்தி குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ 1000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர். ஜெகநாதன், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். நை. சிலம்பரசன் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2024 முதல் அமலுக்கு வந்துள்ள இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டம். இது 1860 ஆம் ஆண்டின் காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டத்தை (IPC) மாற்றியது. இதில் மொத்தம் 358 பிரிவுகள் மற்றும் 20 அத்தியாயங்கள் உள்ளன,
பாரதிய நியாய சன்ஹிதா, இந்திய சட்ட அமைப்பை நவீனமயமாக்கி, விரைவான நீதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.







