திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்; சசிகலா அறிக்கை
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் எடுத்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை. அம்மா ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும்.

நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். புரட்சித்தலைவி அம்மா காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது.
இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை.
எனது வாழ்நாள் முழுவதும்தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவர் திமுக ஒரு தீயசக்தி என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்.
புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம், வரலாறு படைப்போம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







