கோவில்பட்டியில் அய்யப்ப மண்டல பூஜை: பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் செய்து நேர்ச்சை
கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மண்டல பூஜை விழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமிக்கு உற்சவர் சன்னதி முன்பாக சகஸ்கர நாம அர்ச்சனை நடந்தது. கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருவதால், கோவில் முன்புள்ள காயத்ரி மண்டத்தில் ஐயப்ப விக்ரகம் வைக்கப்பட்டு, விசேஷ பூஜையும் ஹோமமும் மகா அன்னதானமும் நடந்தது.

தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்ட இலையில் குழந்தைகள், கன்னி சுவாமிகள், பெண்கள் மற்றும் மாலையிட்டு விரதம் இருக்கும் ஐயப்பன் சுவாமிகள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட ஐயப்பன் சுவாமிகள் அங்கபிரதட்சணம் செய்து நேர்ச்சை செலுத்தி வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த இலைகளை தலையில் வைத்து சரண கோஷம் பாடியபடி அங்கபிரதட்சணம் செய்தனர். ஏற்பாடுகளை லோக்வீர் ஐயப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்ற இலையில் ஏதாவது ஒன்றில், சுவாமி ஐயப்பனே வந்து சாப்பிட்டு சென்றுள்ளார் என்பது ஐதீகம்.
அதன்படி, அனைத்து இலைகளில் மீதும் அங்கப் பிரதட்சணம் செய்யும் போது, நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.







