நெல்லையில் விதிமுறைகள் மீறல்: 6 கடைகளுக்கு சீல்- 1 டன் அல்வா பறிமுதல்
திருநெல்வேலி அல்வா மிகவும் பிரபலமானதாகும். இந்த நிலையில் பல்வேறு கடைகளில் தரமற்ற அல்வா விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் வருகிறது.
இதனால் நெல்லையில் உள்ள அல்வா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நெல்லையப்பர் கோயில் மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் பல கடைகளில் ‘சுத்தமான நெய் அல்வா’ என்று லேபிள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சோதனையில் அவர்கள் வெறும் நெய்யை மட்டும் பயன்படுத்தாமல், அதனுடன் டால்டா) மற்றும் கடலை எண்ணெய் அல்லது ரீபைண்டு ஆயில் ஆகியவற்றை கலந்து அல்வா தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வனஸ்பதி மற்றும் எண்ணெய் கலந்த பிறகு அதை ‘நெய் அல்வா’ என்று விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்ற வகையில் விதிமுறைகளை மீறியதாக 6 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்ன.
நெல்லையப்பர் கோவில் பகுதியில் ஒரு பெரிய கடை மற்றும் 3 சிறிய கடைகள் என மொத்தம் 4 கடைகள் மூடப்பட்டன. ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பெரிய கடை மற்றும் சிறிய கடைகள் மூடப்பட்டன.
பிரபலமான ‘இருட்டுக்கடை அல்வா’ கடைக்கு அருகிலேயே, வாடிக்கையாளர்களைக் குழப்பும் வகையில் பெயர் பலகை வைத்திருந்த கடை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்தசோதனையின் போது மொத்தம் 1 டன் அல்வா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விதிமீறல் லேபிள்கள் மட்டுமே சுமார் 25 கிலோ வரை கைப்பற்றப்பட்டன.
இனிமேல் கடைகளில் ‘அல்வா’ என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் கலப்பட எண்ணெய் பயன்படுத்தினால் அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தவறுகளை மறைக்க ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும் முறையான அச்சிடப்பட்ட லேபிள்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.







