ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திரையுலக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி





ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86. இவரது உடல் ஏவிஎம் ஸ்டியோவில் 3 வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் . தனசேகர் ஆகியோர் சென்று இருந்தனர்.
அதிமுக சார்பில் அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவகுமார், அவரது மகன் நடிகர் சூர்யா, சினிமா பாடல் ஆசிரியர் கவினர் வைரமுத்து உள்பட ஏராளமானவர்கள் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

முதலமைச்சர் மு.க.வெளியிட்டுள்ள இரங்கல் செயுதியில் கூறி இருப்பதாவது:-
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் – திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவிஎம் அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன்.
பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறனின் “குலதெய்வம்” என ஏவிஎம் நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவிஎம் சரவணன்.

கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏவிஎம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார்.
அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அன்புமணி
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழ்த் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவராக போற்றப்படும் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்களின் புதல்வரும், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
திரைப்படத் தயாரிப்பில் தந்தைக்கு உதவியாக இருந்து செயல்பட்ட ஏ.வி.எம். சரவணன் அவர்கள், தந்தைக்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை தலைமையேற்று நடத்தினார். தமிழ்த் திரையுலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த அவர், ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்.

எம்.ஜி.ஆர், கலைஞர், ஜானகி அம்மையார், ஜெயலலிதா, என்.டி.ஆர் ஆகிய 5 முதலமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். எங்கள் இல்ல விழாக்களில் பங்கேற்றவர்.
அமைதி, அடக்கம், எளிமை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
பெரியவர் ஏ.வி.எம். சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஏவிஎம் நிறுவனப் பணியாளர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்,







