தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: காங்கிரஸ் ஐவர் குழுவினர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் 4 முனைப்போட்டிக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் (25 தொகுதிகள்), ம.தி.மு.க. (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (6), இந்திய கம்யூனிஸ்டு(6), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), தமிழக வாழ்வுரிமை கட்சி (1), மக்கள் விடுதலை கட்சி (1), ஆதித்தமிழர் பேரவை (1), அகில இந்திய பார்வர்டு பிளாக் (1) ஆகிய கட்சிகள் அங்கம் வகிது அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளில் போட்டியிட்டன.

தற்போதைய தி.மு.க. கூட்டணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளே வந்திருக்கிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கொங்கு இளைஞர் பேரவையும் தி.மு.க. கூட்டணிக்கு மாற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய கட்சியான காங்கிரஸ், கடந்த தேர்தலில் (2021) 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், 18 இடங்களில் வெற்றி பெற்றது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் காண இருப்பதால், தேர்தல் களம் சற்று மாறியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் இந்த முறை கூடுதல் தொகுதிகள் கேட்போம் என்று கூறிவருகின்றன. இது தி.மு.க.வுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன

ஏற்கனவே, அதிருப்தியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள், “கடந்த முறை மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 173 தொகுதிகளில்தான் போட்டியிட்டோம். இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும்” என்று கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கூட்டணி கட்சிகளோ கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது.
நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது
அந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே மற்றும் நிவேதித் ஆல்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

.இந்த குழுவினர் இன்று சென்னையில் திமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினர். திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான .கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர்.டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை 40 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளது. இதனை அறிந்த தி.மு.க. தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன,







