நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகள் அமளி
குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, இந்த குளிர் கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார்.

அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார். நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமுக முறையில் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த விஷயம் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யலாம். இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்தினார்.. மாநிலங்களவையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழிநடத்தினார்,

இதனை முன்னிட்டு, அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே எஸ்.ஐ.ஆர். குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.







