தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 556.70 மி.மீ. மழை பெய்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 70.00 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. கழுகுமலையில் குறைந்தபட்சமாக 5.00 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரங்களில் 2-வது நாளாக கடும் குளிர் வாட்டி வதைப்பதோடு இடைவிடாது சாரல் மழையும் பெய்து வருகிறது.
சாயர்புரம் பகுதியில் பெய்த மழையால் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. உடன்குடி சுற்றுவட்டாரத்தில் 13 குளங்கள் இந்த ஆண்டாவது நிரம்பிவிடுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கருமேனி ஆற்றில் தண்ணீர் வந்தால் தான் குளங்கள் நிரம்பும் என்பதால் மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் மழை அளவு (மி.மீ.) விவரம் வருமாறு:-
தூத்துக்குடி – 32.80
ஸ்ரீவைகுண்டம் – 30.70
திருச்செந்தூர் – 59.40
காயல்பட்டினம் – 70
குலசேகரப்பட்டினம் – 48
சாத்தான்குளம் – 28.60
கோவில்பட்டி – 17
கழுகுமலை – 5
கயத்தார் – 11
கடம்பூர் – 16.60
எட்டயபுரம் – 16
விளாத்திகுளம் – 29
கடல்குடி – 23
வைப்பார் – 49.
சுரங்குடி – 63.
ஓட்டப்பிடாரம் – 18.60
மணியாச்சி – 7.
வேடநத்தம் – 14.
கீழ அரசடி – 18.00
மொத்த மழை அளவு 556.70 மி.மீ.
சராசரி மழை அளவு 29.30 மி.மீ.







