கோவில்பட்டி யில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, போட்டிகள்; கனிமொழி எம். பி. தொடங்கி வைத்தார்


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் டெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அகமதாபாத் தேசிய புத்தாக்க நிறுவனம், சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையம், ஆகியவை இணைந்து மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளை இன்று நடத்தின.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் தொடக்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார்.

புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நாளையும் நடக்கின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் தங்களின் அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல், அறிவியல் மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப யோசனைகள் வளர்ப்பதற்கான மனப்பாங்கை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
மாநில அளவிலான நிகழ்வில் அறிவியல் மாதிரி கண்காட்சிகள், திட்ட விளக்கங்கள், நிபுணர்களின் அமர்வுகள் மற்றும் துறைத்தெரிவாளர்களின் மதிப்பீடுகள் இடம்பெறும். தமிழ்நாட்டை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களால் அமைக்கப்பட்ட குழு, இக்கண்காட்சியில் இருந்து சிறந்த 22 மாணவர்களை தேர்வு செய்து பரிந்துரைக்கும்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் .கருணாநிதி, முதன்மை கல்வி அலுவலர்
சங்கீதா சின்னராணி, செயல் அலுவலர் (மு.கூ.பொ) தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை முனைவர் க.சண்முகசுந்தரம், தேசியப் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் உதவி ஆராய்ச்சியாளர் மெரின் டயானா, ஒருங்கிணைப்பாளர், புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக், அகமதாபாத் தேவேந்திர திவாரி, கே.ஆர். கல்வி குழுமத்தின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, கல்லூரியின் முதல்வர் காளிதாச முருகவேல், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.







