இளையரனேந்தல் பிர்கா உரிமை மீட்பு போராட்டம் வெற்றி பெற்றது; வக்கீல் ரெங்கநாயகலு அறிக்கை
தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு சார்பில் வக்கீல் ரெங்கநாயகலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
இளையரசனேந்தல் பிர்காவில் 12 வருவாய் கிராமங்களை 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து பிரித்து அன்றைய திமுக அரசாங்கம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இணைத்து ஆணை பிறப்பித்தது.
முதலில் வருவாய்துறை மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்தது. அதன்பிறகு படிப்படியாக காவல்துறை, நெடுஞ்சாலை துறை, சுகாதார துறை, நூலக துறை, நீதித்துறை ஆகிய பல்வேறு துறைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. ஆனால் ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சி துறைகள் குருவிகுளம் யூனியனில் இருந்தன. இதனால் 12பஞ்சாயத்துகள் மட்டும் திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் யூனியனில் தொடர்ந்தது.

இதனை கண்டித்து தேசிய விவசாயிகள் சங்கம் அதனுடன் இணைந்த இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு ஆகிய அமைப்புகள் தொடர்ந்து 17 ஆண்டுகள் மக்களை திரட்டி போராடி வந்தனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது தென்காசி மாவட்டம், குருவிகுளம் யூனியனில் வைக்கப்பட்டு தொடர்ந்து மக்கள் இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில் திருவேங்கடம் தாலுகா உருவாக்கப்பட்ட து.
அந்த நேரத்தில் மேற்படி 12 வருவாய் கிராமங்களை திருவேங்கடம் தாலுகா வில் சேர்க்க அன்றைய அதிமுக அரசு முயற்சி செய்த நிலையில், அதனை எதிர்த்து திருவேங்கடம் நகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அன்றைய அரசு கருத்து கேட்பு நடத்தியது. இதைத்தொடர்ந்து நமது வலிமையான போராட்டத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.அதன்பிறகு தென்காசி மாவட்டத்தில் இணைக்க இன்றைய திமுக பொறுப்பாளர்கள் முயற்சி செய்தனர்.

அதனை கண்டித்து பழைய அப்பனேரியில் மிகப் பெரிய கூட்டம் நடத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் அதனையும் தடுத்து நிறுத்தினோம். அப்போது முக்காடு போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவாய் துறையை தக்கவைத்து இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து கோவில்பட்டி யூனியன், தூத்துக்குடி மாவட்டத்தில் இணைத்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதனால் எங்கள் இளையரனேந்தல் பிர்கா உரிமை மீட்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







