இளையரசனேந்தல்,அப்பனேரி உள்பட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைக்க அரசாணை வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குபட்டி, பிச்சைதலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி,,பிள்ளையார்நத்தம், வெங்கடாசலபுரம், , இளையரசனேந்தல் ஜமீன்தேவர்குளம், ஆகிய 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்த போதிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது.
தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு நெல்லை மாவட்டத்துடன் இருந்தது. தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊரக வளர்ச்சி துறை தென்காசி மாவட்டத்துடன் தொடரும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதனால் இந்த 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் போராடி வரும் நிலையில் தேசிய விவசாயிகள் சங்கம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் ஆகியோர் தலைமையான பெஞ்ச் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமென்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாக கடந்த மாதம் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர்
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க ஏற்கனவே கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துறை இயக்குனருக்கு இது அனுப்பப்பட்டிருப்பதாகவும், மூன்று மாதங்களுக்குள் உத்தரவுகள் நிறைவேற்றப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 17.11.2025 தேதியிட்ட அரசாணையை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ளார்.அந்த ஆணையில் கூறி இருப்பதாவது:-
அரசாணை (நிலை) எண்.213, வருவாய் [வ.நி.1(1)} துறை, நாள் 15.04.2008.அரசாணையில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், இளையரசனேந்தல் உள்வட்டத்திலிலுள்ள 12 வருவாய் கிராமங்களை பிரித்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துடன் இணைத்து ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 12 வருவாய் கிராமங்களுக்கான வருவாய்த்துறை நிர்வாகம் தூத்துக்குடி மாவட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரப்பெற்றது.
அரசாணை (நிலை) எண்.98, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நாள் 01.09.2017. அரசாணையில், 12 கிராம ஊராட்சிகள் (முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், வெங்கடாச்சலபுரம், இளையரசனேந்தல் மற்றும் ஜமீன் தேவர்குளம்) திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி அலகிலேயே (தற்போது தென்காசி மாவட்டம்) தொடர வேண்டும் என ஆணையிடப்பட்டது.
அரசாணை (நிலை) எண்.426, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் [வருவாய் நிருவாக அலகு RA 1 (1) பிரிவு] துறை, நாள் 12.11.2019. அரசாணையின் மூலம், திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாணையின் பத்தி எண்.7-இல் உள்ளாட்சிகள் சம்பந்தமான முடிவுகள் அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்குப்பின் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் 10.03.2025 நாளிட்ட கடிதத்தில், தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்தினை சேர்ந்த 12 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கீழ்க்காணும் 12 கிராம ஊராட்சிகளை (இளையரசனேந்தல் உள்வட்டத்திலுள்ள 11 கிராமங்கள் மற்றும் கழுகுமலை உள்வட்டத்திலுள்ள 1 கிராமம்) தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்க கோரி மனு அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது:

மேலும், மேற்கண்ட 12 கிராம ஊராட்சிப் பகுதிகளைச் சார்ந்த பிற துறைகள் (வருவாய்த் துறை, காவல் துறை, பொது சுகாதாரம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை) தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மட்டுமே தூத்துக்குடி மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்பதால் நிர்வாகத்தில் பல பிரச்சனைகள் எழுகின்றன.
எனவே, கோரிக்கை மனுக்களின் தொடர்ச்சியாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையின் தொடர்ச்சியாகவும், தற்போதுள்ள நிர்வாக நிலை மற்றும் நிர்வாக நலன் பொது மக்கள் கோரிக்கை, பல சங்கங்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், தென்காசி மாவட்டம் இளையரசனேந்தல் உள்வட்டத்தில் உள்ள 10 கிராம ஊராட்சிகளை முழுமையாகவும், ஒரு கிராம ஊராட்சியினை (முக்கூட்டுமலை) பகுதியாகவும்

மற்றும் கழுகுமலை உள்வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சியினை உள்ளடக்கிய குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் உள்ள கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்திடவும், முக்கூட்டுமலை கிராம ஊராட்சிக்குட்பட்ட இரு வருவாய் கிராமங்களில் நடுவப்பட்டி வருவாய் கிராமத்தினை (தென்காசி மாவட்டம்) தனி கிராம ஊராட்சியாக (1.நடுவப்பட்டி 2. ஸ்ரீரங்கராஜபுரம் குக்கிராமங்கள்) தென்காசி மாவட்டத்திற்கும், முக்கூட்டுமலை வருவாய் கிராமத்தினை (தூத்துக்குடி மாவட்டம்) தனி கிராம ஊராட்சியாக (1. முக்கூட்டுமலை 2. கஸ்தூரிரங்கபுரம் குக்கிராமங்கள்) தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பிரித்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது 28.04.2025 நாளிட்ட கடிதத்தில், தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாக 15.08.2024 அன்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, மேற்காணும் 12 கிராம ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க பரிந்துரை செய்துள்ளார்.
6. எனவே, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், வெங்கடாச்சலபுரம், இளையரசனேந்தல் மற்றும் ஜமீன் தேவர்குளம் ஆகிய 12 கிராம ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்திடவும், தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கூட்டுமலை கிராம ஊராட்சிக்குட்பட்ட இரு வருவாய் கிராமங்களான 1. நடுவப்பட்டி 2. ஸ்ரீரங்கராஜபுரம் ஆகிய குக்கிராமங்களை தனி கிராம ஊராட்சியாக தென்காசி மாவட்டத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்கூட்டுமலை வருவாய் கிராமங்களான 1. முக்கூட்டுமலை 2. கஸ்தூரிரங்கபுரம் ஆகிய குக்கிராமங்களை தனிகிராம ஊராட்சியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பிரித்திட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பரிந்துரை செய்து உரிய ஆணை வழங்கக் கோரியுள்ளார்.

மேற்காண்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனை ஏற்க முடிவு செய்து, பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது:
தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்க்கண்ட 12 வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்படுகிறது :

தற்போதைய லெட்சுமியம்மாள்புரம் ஜமீன் தேவர்குளம் முக்கூட்டுமலை கிராம
இளையரசனேந்தல் ஜமீன் தேவர்குளம் ஊராட்சியைப் பிரித்து கீழ்வருமாறு தனித்தனியான கிராம ஊராட்சிகளாக உருவாக்கப்படுகிறது :
:I. நடுவப்பட்டி கிராம ஊராட்சி (நடுவப்பட்டி மற்றும் ஸ்ரீரங்கராஜபுரம் குக்கிராமங்கள்) தனி கிராம ஊராட்சியாக தென்காசி மாவட்டத்தில் செயல்படும்; மற்றும்
II. முக்கூட்டுமலை கிராம ஊராட்சி (முக்கூட்டுமலை மற்றும் கஸ்தூரிரங்கபுரம் குக்கிராமங்கள்) தனி கிராம ஊராட்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும்.
இவ்வாணையினைத் தொடர்ந்து, மாவட்ட அரசிதழில் உடன் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை தொடருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி / தூத்துக்குடி மாவட்டம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







