கூலர் மெஷின் சேவை குறைபாடு: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த அழகுமுத்து என்பவர் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியிலுள்ள ஒரு எண்டர்பிரைசஸிடம் கூலர் மெஷின் வாங்கினார்.
வாங்கிய சில அதில் பழுது ஏற்பட்டதால் சர்வீஸ் செய்து தர மேற்கண்ட கடைக்காரரை அணுகியுள்ளார்.

ஆனால் கடைக்காரர் பழுதை முழுமையாக சரி செய்து கொடுக்கவில்லை. ஏற்கனவே பழுதடைந்த கூலரை பெற்றுக் கொண்டு புதிய கூலர் மெஷின் மாற்றிக் கொடுக்குமாறு அழகுமுத்து கேட்டுள்ளார். இதற்கும் கடைக்காரர் சரியாக பதிலளிக்கவில்லை.
இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினர்.
தனியார் எண்டர்பிரைசஸ் கூலர் மெஷினை நல்ல முறையில் சரி செய்து தர வேண்டும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 20,000 ஐ 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் கூறினர்.







