பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா (வயது 45). கடந்த 2-ந் தேதி முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள், சைக்கிளில் இருபுறமும் சென்றனர்.
சாலையின் இருபுறமும் ஏன் சைக்கிள் ஓட்டுகிறீர்கள், ஒருபுறமாக ஓட்டுங்கள் என்று முத்து மகேஷ் கூறினாராம். இதுகுறித்து ஜி.பி.முத்துவிடம், அவரது மகன்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, தம்பி இசக்கிமுத்துவின் மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகிய 4 பேரும் முத்து மகேஷ் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவரை வெளியே அழைத்தனர்.

இதற்கு அவர் மறுத்ததால் அங்கிருந்த பால அமுதாவை 4 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை, கை, முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் உடன்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பால அமுதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார், ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







