அரசு பணி நியமனத்தில் ரூ 888 கோடி ஊழலா? சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 உயர் பதவிகளுக்கான தேர்வு மற்றும் நியமனத்தில் ஏறக்குறைய ரூ 888 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் பணி நியமனங்கள்; கூட்டுறவுத் துறை, சத்துணவுத் துறை, கால்நடைத் துறை, கல்வித் துறை, போக்குவரத்துத் துறை என அனைத்து அரசுத் துறைகளிலும் நடைபெற்ற பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருந்ததில்லை என்பதே பரவலான குற்றச்சாட்டு ஆகும்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு, தென்காசியில் ரேஷன் கடை ஊழியர் நியமனத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் அளித்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டு வெளியானதைச் சுட்டிக்காட்டிய பின், அன்றைய மாவட்ட ஆட்சியரால் அப்பட்டியல் ரத்துச் செய்யப்பட்டது. அதேபோன்று இந்து அறநிலையத்துறைக் கோவில்களில் முக்கியமான பதவி நியமனங்களிலும் அரசியல் தலையீடுகளாலேயே ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தற்போது நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறையில் 2,538 பணியிடங்களும், ஒவ்வொரு பணியிடத்திற்கும் தலா ரூ 25 லட்சம் முதல் ரூ 35 லட்சம் வரை ஏறக்குறைய ரூ 888 கோடி லஞ்சமாகப் பெறப்பட்ட பின்னரே பணி நியமனங்கள் நடந்திருப்பதாகவும், பணப்பரிமாற்றத்திற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அதனால் உடனடியாக முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்யுமாறு தமிழக டி.ஜி.பி. அவர்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவ்வாறு நடந்திருந்தால், அது மிகப் பெரிய ஊழல் ஆகும்.
எனவே, இது குறித்து தமிழகக் காவல்துறை விசாரித்தால் முழு உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறி உள்ளார்.







