சென்னைக்கு 550 கி.மீ. தொலைவில் `மோன்தா’ புயல்
வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது.
`மோன்தா’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. இந்நிலையில், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 680 கி.மீ. தொலைவிலும் புயலானது நிலை கொண்டிருந்தது.

இந்நிலையில், காலை 8.15 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின்னர், வடமேற்கே நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை தீவிர சூறாவளி புயலாக உருவெடுக்கும். தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே வருகிற 28-ந்தேதி அன்று (நாளை) மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான தெற்கு ஆந்திர பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதி கனமழையும் பதிவாகக்கூடும்.

புயலை முன்னிட்டு, அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி முன்பே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. புயலை எதிர்கொள்வதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.







