கோவில்பட்டியில் பள்ளி மாணவர் மாநில ஆக்கி: ராமநாதபுரம் மாவட்ட அணி ரூ.13.5 லட்சம் பரிசைவென்றது

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டியில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது,
5-வது நாளான இன்று நடந்த முதல் போட்டியில் மதுரை மாவட்ட அணியும், திருச்சி மாவட்ட அணியும் மோதின. இதில், 6 – 0 என்ற கோல் கணக்கில் திருச்சி மாவட்ட அணி வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணியுடன், ராமநாதபுரம் மாவட்ட அணி மோதியது. இதில், 1 – 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையை பெற்றது.
மதியம் நடந்த முதல் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணியுடம், மதுரை மாவட்ட அணியும் மோதின. இதில், 3 – 1 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அணியும், திருச்சி மாவட்ட அணியும் மோதின. இதில், 1 – 0 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் மாவட்ட அணி வெற்றி பெற்றது.
புள்ளிகளின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து ரூ.13.5 லட்சம் பரிசை வென்றது. 2-வது இடத்தை பிடித்த திருச்சி மாவட்ட அணிக்கு ரூ.9 லட்சம், 3-வது இடம் பிடித்த திருநெல்வேலி மாவட்ட அணிக்கு ரூ.4.5 லட்சம் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, அர்ஜுனா விருது பெற்ற ஆக்கி வீரர் முகமது ரியாஸ், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து ராஜா, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெய கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் ராஜா தலைமையில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி ராஜ், கோவில்பட்டி விளையாட்டு விடுதி மேலாளர் ரத்தினராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.







