தூத்துக்குடியில் உப்பள தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி பிரசார இயக்கம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்காக உப்பள பகுதிகளை கையகப்படுத்த முயல்வதை கண்டித்தும், உப்பள தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
தொழிற்சங்க பொதுச் செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார், நிர்வாகிகள் ராமசாமி, சங்கரன் மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரசார இயக்க தொடக்கத்தில் மாவட்ட தலைவர் பேச்சிமுத்து விளக்க உரையாற்றி பேசினார். அப்போது “தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பார் பகுதியில் 1200 ஏக்கர் மற்றும் கடலோர பகுதிகளில் தரிசு நிலங்களாக உள்ள 2000 ஏக்கர் நிலங்களை பயன்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில செயலாளர் சண்முகம் முதலமைச்சரை சந்தித்து கேட்டுக் கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்து உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் பேசுகையில், “கடந்த 93 ஆண்டுகளாக இப்பகுதியில் நிலத்தை சீர்படுத்தி உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது, ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை ஏற்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
இந்த பிரசார இயக்கம் முள்ளக்காட்டில் தொடங்கி பழையகாயல் ரட்சனியாபுரம் முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.







