டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை- பயப்படுவதற்கு எதுவும் இல்லை; அன்புமணி தகவல்
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று அவர் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. டாக்டர் செங்குட்டுவேல் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இருப்பினும் டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனையடுத்து இன்று காலை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் டாகடர் ராமதாஸை சந்திக்க அவரது மகன் அன்புமணி நேரில் சென்றார். ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் அன்புமணி கேட்டறிந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறியதாவது:-
நேற்று மாலை டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. பயப்படுவதற்கு எதுவும் இல்லை. அய்யாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்கின்ற மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஐசியூவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை. இன்னும் 6 மணி நேரம் ஐசியூவில் இருப்பார். மருத்துவர்களிடம் நான் பேசினேன்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.







