மனைவியால் கைதான போலீஸ்காரர், ஜாமீனில் வந்ததும் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம், கண்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் விக்னேஷ் (வயது 36). 2011ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்த இவர், சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தார்.
இவருக்கும், சிவகாசியை சேர்ந்த மகாலட்சுமிக்கும் 2016 இல் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மகாலட்சுமி குழந்தைகளுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே சொத்து விவகாரத்தில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.. இதனிடையே, மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமியின் வீட்டில் தங்கி இருக்கிறார்..

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மகாலட்சுமி அவரது தங்கை மூலம் விக்னேஷ் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து , விக்னேஷை கைது செய்தனர். இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீனில் வந்த அவர், கோவில்பட்டி லட்சுமிபுரம் மேல காலனியில் உள்ள பெற்றோர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்; மேலும்,விசாரித்து வருகின்றனர்.







