மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, நிறுவனத் தலைவர் மூவி சுந்தர் தலைமை தாங்கினார். தென் மண்டல தலைவர் சுரேஷ் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாரீஸ்வரன், ஒன்றிய தலைவர் தில்லை நடராஜன், சங்க நிர்வாகிகள் செல்லப்பாண்டி, சண்முகையாபாண்டியன், செல்வம், மகேந்திரன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் ஹமான்சூ மங்களை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறி இருந்ததாவது:-
பருவநிலை மாற்றம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள் பயிரிட்டிருந்த மக்சாச்சோளம், உளுந்து, பாசி, நெல் உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதமடைந்தன.

வட்டிக்கு கடன் வாங்கி, அதன மூலம் விதைகள் மற்றும் உரங்களை வாங்கி, பயிர் செய்த விவசாயிகள் தற்போது பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மழையால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தவித்து வருகின்றனர்.
வேளாண்மைத் துறை அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்தனர். ஆனால், 10 மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை நிவாரண தொகையோ, பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையோ விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
எனவே, மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு சார்பில் கொடுக்கக் கூடிய இழப்பீட்டுத் தொகையையும், காப்பீட்டுத் தொகையையும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







