நாகையில் விஜய் பிரசாரத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். நாகையில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது .அவற்றின் விவரம் வருமாறு:-
*பிரசாரத்தின்போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
* வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு புதுச்சேரி எல்லை என்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

*பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
*பிரசாரத்தில் யாரும் கம்பு, குச்சி, பிற ஆயுதங்கள் வைத்திருத்தல் கூடாது.
*அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது; அப்படி ஏற்படுத்தினால் அதற்கு கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும்.
*புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரெயில்வே கேட் இருப்பதால் ரெயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
*உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற சாலைகளிலும் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது
*விஜய் செல்லும் பிரசார வாகனத்தின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அந்த வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ இரு சக்கர வாகனம், காரோ செல்லக்கூடாது.
* அண்ணா, பெரியார் சிலை தடுப்புகள் மீது ஏறி இடையூறு செய்யக்கூடாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







