திமுக முப்பெரும் விழாவில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது; மு.க.ஸ்டாலின் வழங்கினார்



கரூர் மாவட்டம் கரூர் மாநகர புறவழிச்சாலையில் உள்ள கோடாங்கிப்பட்டி பகுதியில் திமுக முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது.
நுழைவு வாயிலில் இருந்து வேனில் நின்றுகொண்டு கட்சித் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே பயணித்து தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்தார்.
திமுக முப்பெரும் விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு, பெரியார் விருதை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்.” “பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியார் விருது பெற்ற கனிமொழி, நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி, திராவிட இயக்கத்தின் திருமகளாக, பெரியாரின் பேத்தியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் பெரியார் விருதுக்கு வழங்கப்பட்ட ரூ.3 லட்சத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வழங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விருது பெற்ற கனிமொழி பேசும்போது,” ஆங்கிலத்தில் ‘All roads lead to rome’ என்று சொல்வார்கள். அதன்படி இந்தியாவின் பார்வையை இன்று கரூருக்கு திருப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு கனவு இருக்கும். எனக்கு இருக்கும் ஒரே கனவு, தலைவர் கலைஞர் பெற்ற பெரியார் விருதை பெறுவது தான். அதனை இன்று பெற்றிருக்கிறேன். அதை நிறைவேற்றி தந்த நமது முதலமைச்சர், திமுக தலைவர், அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கொட்டும் மழையிலும் இங்கு நிற்கக் கூடிய உடன்பிறப்புகளை பார்க்கும்போது, ’இந்த படை போதுமா?’ என கேட்கத் தோன்றுகிறது. அதோடு எந்த தேர்தலையும், எந்த பகைவர்களாக இருந்தாலும், அது நம்முடைய பரம்பரை பகைவர்களாக இருக்கட்டும், பாரம்பரிய பகைவர்களாக இருக்கட்டும் அல்லது புதிதாக வரக்கூடியவர்களாக இருக்கட்டும் அத்தனை பேரையும் வென்றுகாட்டுவோம் என சூளுரைக்கக்கூடிய இந்த படை போதும். திமுகவிற்கு வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டார்,
மேலும் பாளையங்கோட்டை முன்னாள் தலைவர் சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது, அண்ணாநகர் முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருது, கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, கட்சியின் ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் மருதுார் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருது, முன்னாள் அமைச்சர் பொங்கலுார் நா. பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் விருது வழங்கப்பட்டது.







