கோவில்பட்டி ஒர்க்ஷாப்பில் கார் தீப்பிடித்து நாசம்
கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் சாத்தூர் மெயின் ரோட்டில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
இந்த ஒர்க்ஷாப் அருகே உள்ள காலி இடத்தில் புற்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அந்த புற்கள் மீது நேற்று சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் புற்கள் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்து சுற்றிலும் பரவியது.
அப்போது இந்த ஒர்க்ஷாப்பில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் தீப்பற்றியது. இதில் கார் முழுவதும் தீயில் கருகி முழுவதும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 30 நிமிட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், எரிந்து சேதமடைந்த கார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுது பார்ப்பதற்காக குமாரின் ஒர்க்ஷாப்புக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது என தெரியவந்தது.
,கார் தீப்பிடித்த விவகாரம் எதிர்பாராமல் நடந்த விபத்தா? அல்லது திட்டமிட்டு யாராவது காரை கொளுத்த வேண்டும் என்பதற்காக புல்லுக்கு தீ வைத்தார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







