நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்; திருச்சி பிரசாரத்தில் விஜய் பேச்சு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
விஜய் பிரசாரத்திற்காக நவீன பஸ்சை பயன்படுத்துகிறார், இந்த பஸ்சின் ஒரு பகுதியில் உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது லோகோ அச்சிடப்பட்டுள்ளது,.இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளது. விஜய்யின் பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது.




மக்கள் சந்திப்புக்காக விமானம் மூலம் விஜய் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு தொண்டர்கள் சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் காலை 10:30 மணி முதல் 11மணி வரை பேச விஜய்க்கு போலீஸ் அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது.

திருச்சி டோல்கேட் பகுதியில் தொண்டர்கள் கூட்டத்தில் விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது. திருச்சி மரக்கடை நோக்கி பயணம் செய்தநிலையில், விஜய் வருகைக்காக மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் காத்திருந்தனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் இன்று திருச்சிக்கு வந்து. விமான நிலையத்தில் இருந்து அவர் பிரசார வாகனத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை முன் பிரசார உரையை தொடங்குவதாக திட்டமிட்டு இருந்தது, காலை 10.30 மணிக்கு மரக்கடை பகுதிக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் காரணமாக பயணம் 4 மணிநேரம் தாமதமானது. இதையடுத்து, மதியம் 2.30 மணி அளவில் மரக்கடை பகுதியை வந்தடைந்தார்.
மரக்கடை அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன் பிரசார வாகனத்தின்மீது நின்றவாறு விஜய பேசியதாவது:-

எல்லாருக்கும் வணக்கம்…
அந்த காலத்துல, போருக்கு போறத்துக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்குறதுக்காக குலதெய்வ கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்கலாம். அந்த மாதிரி தேர்தலுக்கு போறதுக்கு முன்னாடி நம்ம மக்களை பார்த்துட்டு போலாம்னு வந்திருக்கேன்.
ஒரு சில மண்ணை தொட்டா ரொம்ப நல்லது. ஒரு சில நல்ல காரியங்களை இந்த இடத்துல இருந்து தொடங்குனா நல்லதுனு பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா? அது மாதிரி திருச்சில தொடங்குனா திருப்பு முனையா அமையும். அதுக்கு உதாரணமா அண்ணா அவர்கள் 1956ல தேர்தல்ல நிக்கனும்னு நினைச்சது திருச்சிலதான். எம்ஜிஆர் 1974ல முதல் மாநாடு நடத்துனது திருச்சிதான்.

அது மாதிரி திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கு. பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை இருக்கும் இடம். மதசார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம். கொள்கை உள்ள மண் இது. அது மட்டுமில்லாம, உங்களை பார்க்கும்போது மனசுக்குள்ள ஒரு பரவசம், ஒரு எமோஷன்.
2021 சட்டமன்றத் தேர்தல்ல திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துச்சி. அதுல எத்தனை விஷயங்களை நிறைவேற்றியிருக்காங்க? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?
நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே?

திமுக-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள். அனைத்து மகளிருக்கும் ₹1,000 தருவதில்லை. ஆனால், கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
ஆனால், கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை த.வெ.க செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும் சட்டப் பிரச்னைகளிலும் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்.
இவ்வாறு விஜய் பேசினார்.தொடர்ந்து பெரம்பலூர் புறப்பட்டு சென்றார். அங்கு பிரசாரம் முடித்தபிறகு அரியலூர் செல்கிறார்.







