ரூ.10 ஆயிரம் லஞ்சம்: மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர் கைது
நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் (வயது45) என்பவர் மருந்து கட்டுப்பாடு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவரை பூதப்பாண்டியை சேர்ந்த ஹரிஹரன் சந்தித்து, திட்டுவிளையில் புதிதாக மருந்தகம் திறப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு கதிரவன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கூறினார்.

இதற்கு முதலில் சம்மதம் தெரிவிப்பதாக ஹரிஹரன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து கதிரவனிடம் கொடுக்குமாறு அறிவுரை கூறினர்.
இதையடுத்து ஹரிஹரன் நேற்று மதியம் கதிரவனை தொடர்பு கொண்டு, தான் பணத்துடன் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை பெற்று செல்லுமாறும் கூறினார்.
கதிரவன் அங்கு வந்ததும் போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கதிரவனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்கால், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி மற்றும் போலீசார், மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர் கதிரவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்,
தொடர்ந்து அவரை போலீசார் வடசேரியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை செய்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.







