46 விளையாட்டிற்கான தேர்வு அட்டவணையில் தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிப்பு; மாணவ, மாணவிகள் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவை தலைமையகமாக கொண்டு 1954 ம் ஆண்டு முதல் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு(SGFI) செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் பள்ளி விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி உலகளாவிய அளவில் பல வீரர்களை உருவாக்கி இந்த கூட்டமைப்பு இயங்கி வருகிறது.
2025-26 ஆம் ஆண்டிற்கான இந்திய பள்ளி 69 வது விளையாட்டு குழும போட்டிகள் நடத்தும் மாநிலங்களின் அட்டவணையை வெளியிட்டுள்ளது, இதற்காக ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான அணி வீரர்களை மண்டல மற்றும் மாநில அளவில் தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் பள்ளி மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் வெளியிட்ட மாநில விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான தேர்வு அட்டவணையில் தூத்துக்குடி மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. புதிய மற்றும் பழைய விளையாட்டு என 104 விளையாட்டுகள் உள்ள நிலையில் தற்பொழுது 46 விளையாட்டிற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாநில அளவில் எந்த ஒரு விளையாட்டிற்கான வீரர் மற்றும் வீராங்கனை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிற மாவட்டங்களுக்கு பெரும்பாலும் வட மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் ஒரு சில மாவட்டங்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட விளையாட்டை மட்டும் தேர்வு செய்து அந்த மாவட்டத்தில் உள்ள அதிகப்படியாக வீரர்/வீராங்கனைகளை தேர்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சில மண்டல போட்டிகள் மட்டுமே நடத்திட தூத்துக்குடி மாவட்டத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் (2025-26 )முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஆக்கி , கூடைப்பந்து,கால்பந்து, கபடி, மற்றும் தடகளம் போன்ற போட்டியில் அதிகமான இந்திய வீரர்களை உருவாக்கிய தூத்தக்குடி மாவட்டத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடத்திட வாய்ப்பு வழங்காதது பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் உண்டாக்கி உள்ளது.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் இந்த போட்டிகளில் பங்கேற்று பெறக்கூடிய சான்றிதழ்கள், உயர் கல்வி படிப்பில் விளையாட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாநில அளவிலான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்திற்கும் வழங்க நடவடிக்கை எடுத்திட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுத்திட தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது,.







